மாஃபியாக்களிடம் வாங்கிய பணத்தில் 4 இன்னோவார் கார்- கோவையில் மீண்டும் துவங்கிய மணல் கொள்ளை

மாஃபியாக்களிடம் வாங்கிய பணத்தில் 4 இன்னோவார் கார்- கோவையில் மீண்டும் துவங்கிய மணல் கொள்ளை

இயற்கையால் திகட்டத் திகட்ட ஆசீர்வதிக்கப்பட்ட கோவை மாவட்டமானது, மனிதனால் திணறத் திணற சீரழிக்கப்படுவதுதான் உச்சகட்ட கொடூரம். கல் குவாரிகளுக்கு நிகராக இப்போது மண் வளமும் மடக்கி மடக்கி கொள்ளை போவதுதான். கடல் ஒன்றைத் தவிர எல்லாவித இயற்கை வளங்களும் நிரம்பியிருக்கும் கோவை மாவட்டத்தில் கடந்த சில காலமாக கனிமவள கொள்ளை உச்சம் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தில் கல் குவாரிகள் நிரம்பியிருக்கும் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் இருந்து கண்மூடித்தனமாக பாறைக்கற்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. இந்த விவகாரம் குறித்து குமுதம் டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறோம்.

இந்நிலையில், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியின் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செம்மண் அள்ளி கடத்துவதோடு, சட்ட விரோதமாக செங்கல் சூளைகளும் செயல்பட்டு வந்தன. செம்மண் கடத்தல் என்றால் சாதாரணமாக இல்லை. தினமும் ஐநூறு, எழுநூறு லாரிகளில் டன் டன்னாக செம்மண்ணை இங்கிருக்கும் பள்ளங்களில் இருந்து அள்ளி அந்த இடங்களில் செயற்கை பள்ளத்தாக்குகளை உருவாக்கினார்கள் செம்மண் மாஃபியாக்கள்.

மிக அடர்ந்த காட்டுப் பகுதிகளை கொண்ட இங்கே இப்படி உருவாக்கப்பட்ட மெகா பள்ளங்களில் தவறி விழுந்து இறந்த காட்டு யானைகள் பல. அதே போல் மழைக்காலங்களில், நீர் நிரம்பிய இந்த பள்ளங்களில் மூழ்கி இறந்த மனிதர்களும் பலர். இது மட்டுமல்லாமல் இங்கேயே மண்ணை அள்ளி, அங்கேயே பெரிய செங்கற் சூளைகளை அமைத்து செங்கல் தயாரித்து டன் டன்னாக விற்பனையும் செய்தனர். இதில் பாதி சூளைகளுக்கு அனுமதி இருந்தால் பாதிக்கு கிடையாது.

இந்த சூளைகள் உருவாக்கும் புகையால் மிக செழுமையான தடாகம் பசுமை பள்ளத்தாக்கு பகுதியானது கொஞ்சம் கொஞ்சமாக தன் பொழிவை இழந்து, கருக துவங்கியது. கற்பனைக்கு எட்டாத இயற்கை வளங்களை சில மனிதர்களின் பேராசை கதறக் கதற கற்பழித்தது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்ற பவர்ஃபுல் கரங்கள் இந்த மாஃபியாக்களுக்கு துணை நின்று காத்தனர். இதன் மூலம் இந்த மாஃபியாக்கள் சம்பாதித்த தொகை இருபது கோடி, முப்பது கோடியல்ல பலப்பல நூறு கோடிகள்.

அதற்கு பிரதிபலனாக லட்சங்களை லஞ்சமாக அள்ளியள்ளி தந்தனர் மாஃபியா மனிதர்கள். விளைவு, இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, காவல்துறை, மாசுகட்டுப்பாட்டு வாரியத்துறை உள்ளிட்ட பல அரசுத்துறையினரில் சிலர் செல்வச் செழிப்பில் திளைத்தார்கள். நேர்மையாக நடந்து கண்டித்த அதிகாரிகளையும், அலுவலர்களையும் மேலிட தொடர்பு மூலம் தூக்கியடித்தனர் மாஃபியா மனிதர்கள். இந்த கட்சி, அந்தக் கட்சி என்றில்லாமல் எல்லா கட்சியிலும் முக்கிய புள்ளிகளை கைக்குள் வைத்துக் கொண்டு ஆடினர்.

வருவாய்த்துறையின் கடைநிலை ஊழியர் ஒருவர், இவர்களிடம் வாங்கித் திண்ற பணத்தில் 4 இன்னோவா கார்களை வாங்கி கால்டாக்ஸியாக வாடைக்கு விட்டு சம்பாதிக்கிறார் என்றால் இங்கே நடக்கும் லஞ்ச விளையாட்டை யோசித்துப் பாருங்கள். ஒரு கடைநிலை ஊழியருக்கே பைபாஸில் இவ்வளவு சம்பாத்தியமென்றால் உயரதிகாரிகள் கட்டியிருக்கும் கோட்டையை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா?

ஆனாலும், இந்த செம்மண் மாஃபியாக்களுக்கு எதிராக தடாகம் கணேஷ் உள்ளிட்ட சில தன்னார்வலர்கள் உண்மையிலேயே வீரியமாக குரல் கொடுத்தனர். அவர்களின் சட்டப் போராட்டத்தின் பலனாக இங்கே மண் அள்ளுவதையும், சூளைகள் நடத்துவதையும் தடை செய்து, சூளைகளை மூடி சீல் வைக்க உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். அதன்படி செய்யப்பட்டாலும் கூட சில ஆலைகள் கவனிக்க வேண்டிய நபர்களை கவனித்துவிட்டு, தங்களின் ஆலைகளுக்கு ஸ்டாக் இருந்த செங்கலை விற்றனர். மேலும் நள்ளிரவில் செம்மண் கடத்தினர். அதோடு பல ஆலை முதலாளிகள் இந்த தடாகம் பள்ளத்தாக்கில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கோவனூர், பாலமலை மலை, தொண்டாமுத்தூர், ஆலந்துறை மலை வன அடிவாரங்களில் இதே திருட்டு பிஸ்னஸை துவக்கினர்.

தடாகம் பசுமை பள்ளத்தாக்கை பாழ் செய்தது போதாதென்று பாலமலை வனத்தையும் காலி செய்ய துவங்கினர். இது பற்றி குமுதம் குழுமத்தின் பிரபல அரசியல் புலனாய்வு இதழான குமுதம் ரிப்போர்ட்டர், இந்த மாஃபியாக்களின் அட்டகாசத்தையும், இயற்கை அழிவையும் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதியது. இதனால் அவற்றில் சிலவற்றுக்கும் சீல் வைக்கப்பட்டது. சரி இதோடு இவர்களின் கொட்டம் அடங்கிவிடும் என்று சூழல் ஆர்வலர்கள் நிம்மதியானர்கள். ஆனால், சூழல் இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்போது மீண்டும் பேரூர் தாலுகாவில் உள்ள கரடிமடை, மத்தபாளையம், ஆலாந்துறை அருகே வடிவேலம்பாளையம், பூலுவப்பட்டி, மாதம்பட்டி, மற்றும் அனுவாவி, மாங்கரை பகுதிகளிலும் உயர்நீதிமன்ற் உத்தரவை மீறி சட்ட விரோதமாக இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

சுமார் 10க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சட்ட விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் சென்றுள்ளது. ஆக சூழல் ஆர்வலர்களின் போராட்டம் மீண்டும் துவங்கியுள்ளது. இது பற்றி பேசும் தடாகம் கணேஷ் “இந்த பூமி நமக்கு மட்டுமாங்ணா சொந்தம்? புழுவில் துவங்கி யானைகள் வரை எல்லாருக்குமானது. ஆனா பணப்பேராசையில மனுஷன் இயற்கையை எந்தளவுக்கு அழிச்சு ஒழிக்கிறான் அப்படிங்கிறதுக்கு கண்கூடான எடுத்துக்காட்டுதான் கோவை மாவட்டத்தில் நடக்கும் இந்த செம்மண் மாஃபியாக்களின் ஆட்டம். முப்போகம் விளைஞ்சிட்டிருந்த மண்ணு இன்னைக்கு ஒரு போகத்துக்கே திக்கித் திணறுது.

கணேஷ்
கணேஷ்

கோடையிலும் மழை வெச்சு வெளுக்கு கோவையில இப்ப பாருங்க ஜூன் முடிஞ்சு பருவ மழை துவங்க. காரணம், இயற்கை வளத்தை முடிச்சு மூடுவிழா பண்ணிட்டிருக்காங்க. ஆனாலும் இழுத்துட்டிருந்த உயிரை காப்பாத்துற மாதிரி உயர்நீதிமன்றம் இந்த அட்டூழியங்களுக்கு தடை விதிச்சுது. உடனே இடத்தை மாத்தி ஆட்டத்தை ஆரம்பிச்ச மாஃபியா நபர்கள் இன்னைக்கு சூளைகளை தொடர்ந்து இயக்கவும், மணலை அள்ளி அனுப்பவும் ஆரம்பிச்சுட்டாங்க. இது நல்லாயில்லை, நல்லதுக்கில்லைங்ணா. சிம்பிளா சொன்னா… கோவை அழிவை நோக்கி வெகு வேகமா நகருது”என்றார்.

உயர்நீதிமன்ற உத்தரவு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவு என எல்லாவற்றையும் தூக்கி கடாசிவிட்டு இந்த சூளை அதிபர்களும், மண் கடத்தல் பேர்வழிகளும் ஆட்டம் போடுவது எந்த தைரியத்தில்? என்பதுதான் அதிரச்சி கலந்த ஆச்சரியமாக உள்ளது. தெற்கு வருவாய் கோட்டாட்சியர் பண்டரிநாதன் இந்த விவகாரம் பற்றி பேசுகையில் “சட்ட விரோத செங்கல் சூளைகள் சில பேரூர் சுற்று வட்டாரத்தில் செயல்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கே ஆய்வு செய்து, 20 சூளைகளுக்கு சீல் வைத்தோம். இப்ப தொண்டாமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் சில செங்கல் சூளைகள் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.

தசாவதாரம் பூவராகன் போல் ‘பூமி மண்ணை முழுக்க நோண்டி கடத்தியழிச்ச பெறவு, எங்குட்டு போவ? சந்திரமண்டலம் போவியா டே?’என்றுதான் கேட்க தோணுது.

திருந்துங்கடே!

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com