மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்!
மாணவர்
மணிகண்டன் மரணத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்!
முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு
விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர்
விடுத்துள்ள அறிக்கையில், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்
மர்மமான முறையில் இறந்த நிலையில் தற்போது நஞ்சுண்டு உயிரிழந்தார் என காவல்துறை அறிவித்திருப்பது
பல்வேறு ஐயங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது.
முதலில் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகவும், பின்னர் தொண்டையில்
உணவு சிக்கி இறந்ததாகவும் காவல்துறையினர் கூறிவந்த நிலையில், தற்போது விஷம் குடித்து
தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது.
தற்கொலை செய்து கொண்டதாகவே வைத்துக் கொண்டாலும், நல்ல உடல்
நலத்தோடும், உளவியல் நலத்தோடும் இருந்த தம்பி மணிகண்டன் ஒரே நாள் காவல்துறையின் விசாரணைக்குப்
பிறகு, மன உளைச்சலால் உயிரை மாய்த்துக்கொள்கிற முடிவுக்குச் செல்வதற்குக் காரணமென்ன?
காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு தான், தற்கொலை முடிவை
எடுத்தாரென்றால், அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது யார்? அவரது மரணத்திற்குப் பொறுப்பு
யார்? காவல்துறையும் அரசும் தானே.
காவல்துறையினர் மீதே சந்தேகம் எழுகிற இச்சூழலில் அவர்களைக்
கொண்டே இவ்வழக்கை நடத்தி முடிப்பது முறையானதாக இருக்காது.
மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு
உட்படுத்த வேண்டும். மாணவர் மணிகண்டன் குடும்பத்தினருக்கு உரிய துயர்துடைப்புத் தொகை
வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.