”இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம்” – சீமான் நம்பிக்கை

”இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம்” – சீமான் நம்பிக்கை

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வி அடையவில்லை. பல இடங்களில் வென்றுள்ளோம். இன்று இல்லை எனில் நாளை வெல்வோம் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகி வருகின்றன. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தோல்வி குறித்து அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "தேர்தலில் பல இடங்களில் நாம் தமிழர் கட்சி வெற்றிபெற்றுள்ளது, படுதோல்வி அடையவில்லை; வளரும் கட்சி படிப்படியாகத்தான் வளரும், இன்று இல்லை என்றால் நாளை வெல்வோம்” என்று தெரிவித்தார்.

மேலும் "அதிமுக, திமுக ஆகியவை முதலில் தனித்து போட்டியிட்டு தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டும்; எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளதோ அவர்களுக்குதான் மக்கள் வாக்களிப்பார்கள்" என்று கூறினார்.

இதற்கிடையில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த சீமான், "சாட்டை துரைமுருகன் சாட்டையை அடிக்கடி வீசிவிடுவதால் பலருக்கு வலிக்கிறது; அதனால் கைது செய்யப்பட்டுள்ளார், சாட்டை துரைமுருகனை கைது செய்யும் போலீஸ், ஹெச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?" என்று கூறினார்.

Find Us Hereஇங்கே தேடவும்