பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை - ஸ்டாலின் கண்டனம்!!

பிறக்கும் குழந்தையின் தலையில் கூட ரூ.62 ஆயிரம் கடன்சுமை - ஸ்டாலின் கண்டனம்!!
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்ரவரி 23) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக திமுக.,வினர் பேச வாய்ப்பளிக்குமாறு கோரியதை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், நாட்டு மக்களின் நலனை அறவே புறக்கணித்து, கடன் வாங்கி, தமிழக மக்கள் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய்க் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் - தொடர் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என்று எல்லா நிலைகளிலும், மிக மோசமானதொரு நிதி நிர்வாகத்தைக் கையாண்டு - ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தமிழக மக்களுக்கு நிதி நெருக்கடியை உருவாக்கி விட்டார்கள்.

தி.மு.க. ஆட்சியில் 10.5 சதவீதமாக இருந்த வருமானம், அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது 7.2 சதவீதமாக குறைந்து விட்டது. அதாவது மூன்று ரூபாய் வருமானத்தில் ஒரு ரூபாய் காணாமல் போனதன் விளைவாக - 93,737 கோடி ரூபாய் வருமானம் சரிவு ஏற்பட்டு விட்டது. 

கரோனா பேரிடருக்கு முன்பே - அதாவது 2018-ஆம் ஆண்டிலேயே 68 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் காணாமல் போய் - நிதி நிலைமை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி விட்டது.

தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டார்கள். பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் - உருப்படியான உட்கட்டமைப்புத் திட்டம் ஒன்று கூட நிறைவேற்றப்படவில்லை.

வேலைவாய்ப்பும் இல்லை; தொழிற்சாலையும் இல்லை என்பதை விட - மூலதனச் செலவுகளுக்கே நிதி ஒதுக்காத மாநிலங்களின் பட்டியலில் கீழே விழுந்து கிடக்கும் நிலையை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தி - இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டார்கள். 

அதிமுக அரசின் கடைசி நிதி நிலை அறிக்கை (இடைக்கால நிதி நிலை அறிக்கை) உரையையும் - கூட்டத் தொடரையும் திமுக புறக்கணிக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்