நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் ரூ 25 கோடி செலுத்தாவிட்டால் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைக்கப்படுவார் என்று அவரது குடும்பத்தினர் மிரட்டப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (என்சிபி) முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மீது சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆர் பதிவில் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 2021 -ல் மும்பைக்கு அப்பால் ஒரு பயணக் கப்பலில் போதைப்பொருள் கடத்தலில் ஆர்யன் கான் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் வான்கடே, ஷாருக்கான் குடும்பத்தினரை மிரட்டி பணம் கேட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. சிபிஐ அளித்துள்ள முதல் தகவல் அறிக்கையில், வான்கடேவின் வெளிநாட்டு பயணங்கள், விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவை பற்றி விசாரிக்கப்பட்டது.
என்சிபி அதிகாரி வான்கடே, உளவுத்துறை அதிகாரியான ஆஷிஷ் ரஞ்சன் மீதான குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையில், அவர்கள் வாங்கிய சொத்துக்களுக்கு முறையான கணக்கு காட்டவில்லை. வான்கடே, அவரது வெளிநாட்டுப் பயணங்களை சரியாக விளக்கவில்லை. அவரது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவினங்களை தவறாக காட்டியுள்ளார் எனக் கூறுகிறது.
வான்கடே தவிர மற்ற நான்கு குற்றவாளிகளின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களில் விஸ்வ விஜய் சிங் மற்றும் ஆஷிஷ் ரஞ்சன், என்சிபி மூத்த அதிகாரிகளான கே.பி.கோசாவி மற்றும் அவரது உதவியாளர் சான்வில் டி'சோசா ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
கே.பி.கோசாவி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சாட்சியாக உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்யன் கானுடன் செல்ஃபி எடுத்தார். என்.சி.பி-யில் வேலை செய்யாத ஒரு நபர் எப்படி குற்றம் சாட்டப்பட்டவரை அணுக அனுமதிக்கப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்தன.
குற்றம் சாட்டப்பட்ட ஆர்யன் கானின் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களிடமிருந்து ரூ.25 கோடியை மிரட்டி பணம் பறிக்கும் சதி இந்த எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்தத் தொகை இறுதியாக ரூ.18 கோடிக்கு செட்டில் செய்யப்பட்டது. லஞ்சப் பணமாக ரூ.50 லட்சம் டோக்கன் தொகையை கே.பி. கோசாவி மற்றும் அவரது உதவியாளர் சான்வில் டி'சோசாவும் பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
வான்கடே கடந்த ஆண்டு சென்னையில் உள்ள வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார். சமீபத்தில் அவரது வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. "ஒரு தேசபக்தர் என்பதற்காகத் தான் தண்டிக்கப்படுவதாக" அவர் அப்போது கூறினார்.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்யன் கான் 22 நாட்கள் சிறையில் இருந்தார், அதற்கு பிறகு என்.சி.பி அவரை "போதுமான ஆதாரங்கள் இல்லாததால்" குற்றச்சாட்டில் இருந்து விடுவித்தது.