வரும் மக்களவை தேர்தலிலும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. இந்த கூட்டணி சார்பாக ஜனதா தளம் கட்சியை சேர்ந்த குமாரசாமி முதலமைச்சராக பணியாற்றி வருகிறார். வரும் மக்களவை தேர்தலிலும், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால் தொகுதிப்பங்கீடு குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, இந்த தேர்தலில் இரண்டு தொகுதியில் தன்னுடைய இரண்டு பேரன்களை களமிறக்கவுள்ளார். மண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணாவும் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஹாசன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனக்கு கொடுத்த ஆதரவை இனி தன்னுடைய பேரன் பிரஜ்வலுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வருவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு கூறிய போது அவர் கண்கலங்கினார்.
இதுகுறித்து விமர்சனம் செய்துள்ள பாஜகவினர், ‘கண்ணீர் வடிப்பது தேவகவுடா குடும்பத்திற்க்கு புதிதல்ல. சரியாக தேர்தல் நேரங்களிலே அவர்கள் அழுகின்றனர். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் குடும்பத்திற்கு வாக்கு அளித்தவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளனர்.