மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் சிஏஏ-வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. சிஏஏ-வை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி தமிழக சட்டபப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து 9-ம் தேதி தொடங்க உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சிஏஏ-வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாமா என்று அ.தி.மு.க வட்டாரம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து பாஜக மேலிடத்துக்கு தெரிவிப்பதற்காக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் கழிவு நீரேற்று நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் அதிமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்படும் என ஹெச்.ராஜா பேசியது குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, "அப்படியொரு கருத்தினை அவர் சொல்லியிருக்கிறாரா என எனக்குத் தெரியவில்லை. நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். ஸ்டாலினைவிட எங்களுக்கு பெரிய தலைவர் கிடையாது. அவர் தான் எதிர்க்கட்சி தலைவர். வேறு யார் சொல்வதைக் குறித்தும் சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் தான் எல்லோருக்கும் எஜமானர்கள். இவங்க என்ன கலைக்க வேண்டும் என சொல்வது? இது என்ன கருக்கலைப்பா? ஆட்சியைக் கலைக்க வேண்டும் என ஸ்டாலின் முன்பு சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது சொல்வது இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம்" என கூறியுள்ளார்.