ஆடை அணிவதில் எல்லை பற்றி நீங்க பேசலாமா? குஷ்புவை வம்பிழுக்கும் தி.மு.க

மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது என குஷ்பு பேட்டி
குஷ்பு
குஷ்பு

தமிழக அரசியல் அகராதியில் ‘குஷ்பு’ எனும் பெயருக்கு அர்த்தத்தை தேடினால் ‘தைரியசாலி, கருத்துச் சுதந்திர போராளி’ என்பதுடன் ‘சர்ச்சை நாயகி’ எனும் பட்டமும் சேர்ந்தே கிடைக்கும். பல சர்ச்சைகளை கண்ட குஷ்புவின் பேச்சு இப்போது கோவையில் ஒரு பட்டாசை பற்ற வைத்துள்ளது.

தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. என்று எத்தனை கட்சிகளுக்கு தாவினாலும் குஷ்பு ஒன்றை மட்டும் விட்டுத் தருவதில்லை. அது, தனது மனதுக்கு சரியெனப்படுகிற மாடர்னிஷம் கலந்த பெண்ணிய கருத்துக்களை பொது வெளிகளில் அழுத்தமாக பதிவு செய்வதை. அவர் பேசிய கருத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் துளியும் அதிலிருந்து பின் வாங்கவோ, வருத்தம் அல்லது மன்னிப்பு தெரிவிக்க மாட்டார்.

இந்த நிலையில், கோவையில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தனியார் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆடை அணிவகுப்பு நிகழ்வில் கலந்து கொண்ட குஷ்பு அதன் பின் நிருபர்களிடம் கூறிய ஒரு விஷயம் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. இதற்கு தி.மு.கவினர் கொடுத்திருக்கும் கவுன்ட்டர் வைரலாகி வருகிறது.

குஷ்பு பேசியது இதுதான் “கைத்தறியில் செய்யப்பட்ட ஆடைகளை அனைவரும் அணிய வேண்டும். கல்லூரி மாணவர்கள் மேற்கத்திய உடைகளோடு, கைத்தறி உள்ளிட்ட பாரம்பரிய உடைகளையும் அணிய வேண்டும்.

நமது கலாசாரத்தை மறந்துவிட வேண்டாம்” என்றவர் அடுத்து வந்தார் மேட்டருக்கு, ஆடை சுதந்திரம் என்பது, இப்படித்தான் என்று எதுவும் இல்லை.

ஆனால், மனிதர்களுக்கு ஆறு அறிவு இருக்கிறது. ஆடை அணிவதில் எல்லை மீறினால், நமக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதுதான் எல்லை என்பதை தெரிந்து, அதற்கேற்ப ஆடை அணிய வேண்டும்” என்று பேசினார்.

குஷ்புவின் இந்த பேச்சு அப்லோடு ஆன பின், தி.மு.க தரப்பிலிருந்து கிண்டலும் கலாயுமாக வரிசை கட்ட துவங்கின பதிவுகள். அதன் தொகுப்பு இதோ…”ஏனுங்க குஷ்பு, நீங்க ஆடை எல்லை பற்றி பேசுறது கசாப்பு கடைக்காரன் ஜீவ காருண்யம் பற்றி பேசுறது மாதிரி இருக்குது.

கலாசாரம், பாரம்பரியம் பற்றி நீங்க கிளாஸ் எடுக்குறீங்களாக்கும்? செம்ம காமெடி போங்க. நீங்க ஹீரோயினா நடிச்ச படத்தின் பாட்டுகளையும், ரொமான்ஸ் சீன்களையும் யூடியூப்ல போட்டுப் பார்த்துட்டுதான் இந்த பதிவை எழுதுறேன்.

ஆடை அணியுறதில் எல்லை பற்றி நீங்க உரையாத்துறதை நினைக்குறப்ப எங்களுக்கே வெக்கம் வெக்கமா வருதுங்க குஷ்பு. தயவு செஞ்சு மிருகங்களையெல்லாம் இதுல இழுத்து அதை ஏன் அசிங்கப்படுத்துறீங்க?” என்று பட்டாஸு கொளுத்தியுள்ளனர்.

தி.மு.கவினரின் இந்த பதிவுகளுக்கான கமெண்ட்ஸில் பலர் குஷ்புவுக்கு சப்போர்ட் பண்ணி பேசியுள்ளனர். குறிப்பாக, அடுத்தவங்களோட கருத்து சுதந்திரத்தில் நீங்க ஏன் தலையிடுறீங்க?

குஷ்பு கிளாமரா நடிச்சது தொழில் ரீதியான அணுகுமுறை. இப்ப அவங்க அரசியல்ல இருக்கிறது சேவை. ஏன் ரெண்டையும் குழப்பி கேவலமா பிஹேவ் பண்றீங்க?’ என்று சிலர் விளாசியுள்ளனர்.

- ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com