உத்தரப் பிரதேசம்: 5 பேரை வெட்டிக்கொன்று இளைஞர் தற்கொலை - என்ன நடந்தது?

உத்தரப் பிரதேசத்தில் 5 பேரைவெட்டிக்கொலை செய்துவிட்டு துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு

உத்தரப்பிரதேச மாநிலம் மெயூன்பூர் மாவட்டம் கோகுல்பூரா கிராமத்தை சேர்ந்தவர் சிவ்வீர் யாதவ் (36). டெல்லி நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது தம்பி சோனு (21) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சோனி (20) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள சிவ்வீர் யாதவ் தன்னுடைய கிராமத்துக்கு வந்திருந்தார்.

இந்த திருமணத்தில் ஏராளமான உறவினர்கள் கலந்துகொண்டு ஆடல், பாடல் என கொண்டாடினர். திருமணம் முடிந்த பிறகு உறவினர்களில் சிலர் வீட்டில் தங்கி இருந்தனர்.

நேற்று இரவு திருமண வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்தபோது, அதிகாலை 2 மணிக்கு சிவ்வீர் யாதவ் எழுந்து வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து ஆவேசத்துடன் தூங்கி கொண்டிருந்தவர்களை வெட்டியுள்ளார்.

இந்த கொலைவெறி தாக்குதலில் அவரது சகோதரர்கள் புல்லான் (25), புதுமண தம்பதியான சோனு-சோனி மற்றும் மைத்துனர் சவுரப் (23) நண்பர் தீபக் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு, ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதை தடுக்க முயன்ற அவரது மனைவி டோலி (24), அத்தை சுஷ்மா (35) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இதில், படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

உறவினர்கள் உள்ளிட்ட 5 பேரை வெட்டிக்கொன்ற சிவ்வீர் யாதவ் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த கொலையில் சிவ்வீர் யாதவ் ஈடுபட காரணம் என்ன? என்பது தெரியவில்லை. அதே சமயம், சிவ்வீர் யாதவ் பயன்படுத்தியது அனுமதி பெறாதத் துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

திருமண வீட்டில் புதுமண தம்பதி உள்ளிட்ட 5 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்து கிராம மக்கள் ஓடி வந்து பார்த்து கதறி அழுதனர். இதனால் கோகுல்பூரா கிராமமே சோகத்தில் மூழ்கியது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com