உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணிநீக்க நடவடிக்கைகள் பல நடந்தேறி வருகின்றன. இதனால் மொத்த மொத்தமாக பல வேலையிழப்புகள் ஏற்பட்டது.
இந்நிலையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய பொருளாதார மையம் (CMIE) நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதாக ஆய்வு நிறுவனமான 'சென்டர் பார் மானிட்டரிங் இந்தியா எக்கானமி' தனது ஏப்ரல் மாத பொருளாதார புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 7.8 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், ஏப்ரல் மாதத்தில் 8.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
8.51 சதவீதமாக இருந்த நகர்ப்புற வேலையின்மை விகிதம் 9.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த வேலையின்மை விகித அதிகரிப்பானது கடந்த 4 மாதங்களில் இல்லாத கூடுதல் அளவாகும். ஆனால் சற்று ஆறுதலாக கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கிராமப்புற வேலையின்மை விகிதம் 7.47 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்த விகிதம் 7.34 சதவீதமாக குறைந்துள்ளது.
உலகில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை மிஞ்சி இருக்கும் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.