நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என்று கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
53 ஆண்டு கால ஆடை விதியில் மாற்றம் வேண்டும் எனக் கேரளாவில் பெண் நீதிபதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் தற்போது பெண் நீதிபதிகள் சேலை, வெள்ளை நிறத்தில் கழுத்துப் பட்டை, கருப்பு நிற கவுன் அணிய வேண்டியிருக்கிறது. இந்த ஆடையானது அசௌகரியமாக இருக்கிறது. அதுவும், கோடைக் காலத்தில் மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும், நீதிமன்றங்களில் நெரிசலாக இருக்கும் போது இறுக்கமான ஆடைகளைப் பல மணி நேரம் அணிந்திருப்பது சிரமமாக இருக்கிறது என்றும், மின் தடை ஏற்படும் போது வியர்வை வழிந்து இருக்க வேண்டியுள்ளது எனவும் பெண் நீதிபதிகள் குறையாகச் சொல்கின்றனர்.
கேரளா பெண் நீதிபதிகள் 100 பேர் கேரள உயர்நீதிமன்ற பதிவாளரை சந்தித்து 53 ஆண்டு கால ஆடை விதியில் மாற்றம் வேண்டும் எனவும், நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் அவர்கள், 2021-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் வெளியிட்ட சுற்றறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளனர். அதில், பெண் நீதிபதிகள் பனியின் போது, சேலையுடன், சுடிதார், சல்வார், நீளமான பாவாடை, பேண்ட் அணியலாம் எனவும், வெள்ளை, வெளிர் மஞ்சள், சாம்பல், கருப்பு வண்ணத்திலோ, அவற்றின் கலவையிலோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1970 ஆம் ஆண்டு அக்டோபர் 1-ந் தேதி முதல் பெண் நீதிபதிகள் மிதமான வண்ணத்திலான பிராந்திய ஆடை, மேலங்கியுடன், வெண்ணிறத்திலான கழுத்துப் பட்டை அணிய வேண்டும், ஆண் நீதிபதிகள், கருப்புநிற 'ஓபன் காலர்' கோட்டு, வெண்ணிற சட்டை, வெள்ளை நிறத்திலான கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணிய வேண்டும் என்ற நடைமுறை வந்தது குறிப்பிடத்தக்கது.