இந்தியா வந்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் உள்ள கோயிலில் தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்தார்.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார். முன்னதாக மாநாட்டில் பங்கேற்க வந்த ரிஷி சுனக்கை பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார்.
இந்த மாநாட்டில் பெண்கள் முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உலக தலைவர்கள் அனைவரும் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். அவர்களை பிரதமர் மோடி கதர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலில் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் சென்று வழிபாடு செய்தார். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு, சுவாமி நாராயன் அக்ஷர்தாம் கோயிலில் ஆரத்தி எடுத்து மண்டியிட்டு வேண்டிக்கொண்டார். பின்னர் சிறப்பு அபிஷேகம் செய்தார். தொடர்ந்து கோயில் வளாகத்தை சுற்றி பார்த்தார். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் கோயிலின் கட்டமைப்பு குறித்து விளக்கி கூறினர்.
இன்று காலையிலிருந்து டெல்லியில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாது கையில் குடையை ஏந்தி கோவிலுக்கு அவர்கள் வந்திருந்தனர்.
பிறகு அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உலகத்தின் அமைதி, வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் குறித்து வேண்டிக்கொண்டதாக கூறியுள்ளனர்.
முன்னதாக ஏ.என்.ஐக்கு பேட்டி அளித்த ரிஷி சுனக், ”தான் ஒரு பெருமைக்குரிய இந்து என்றும் அப்படிதான் நான் வளர்க்கப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.