ஹெல்மெட் அணியாமல், மற்றொரு பெண்ணுடன் தனது மனைவியின் ஸ்கூட்டரை இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றது கேமராவில் பதிவாகியுள்ளது விவாகரத்து வரை சென்றுள்ளது.
திருவனந்தபுரத்தில் தனது தோழியுடன் ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் போக்குவரத்து விதிமீறல் புகைப்படங்களை அவரது மனைவிக்கு அனுப்பி வைக்கப்பட்டதால் கேரளாவை சேர்ந்த ஒருவர் சிக்கலில் மாட்டியுள்ளார்.
கேரள மாநில மோட்டார் வாகனத் துறை அந்த நபரின் போக்குவரத்து விதிமீறல் புகைப்படங்களை விவரங்களுடன் அவரது மனைவிக்கு அனுப்பி வைத்தது. அதாவது திருவனந்தபுரத்தில் பொருத்தப்பட்ட உயர்நிலை கேமராக்களில் அந்தப் புகைப்படங்கள் பதிவாகின. அதில் கடந்த ஏப்ரல் 25ம் தேதி ஒரு ஆண் தனது பெண் நண்பருடன் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து கொண்டிருந்தார். ஹெல்மெட் அணியாமல் விதிமுறைகளை மீறி இருவரும் பயணம் செய்தது தொடர்பான அந்தப்புகைப்படங்கள் அவர்கள் ஓட்டிச் சென்ற வாகனத்தின் உரிமையாளராக இருந்த மனைவிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படத்தில் இருக்கும் பெண் குறித்து மனைவி கணவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பெண்ணுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறிய கணவர், அந்தப் பெண் தனது தோழி மட்டுமே. ஸ்கூட்டரில் லிப்ட் கேட்டதால் கொடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த விளக்கத்தை மனைவி ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கணவருக்கு ஆத்திரம் ஏற்படவே, மனைவியையும், தனது மூன்று வயது குழந்தையையும் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மே-5 அன்று அவரது கணவர், தன்னையும் அவர்களின் மூன்று வயது குழந்தையையும் கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கணவர் கைது செய்யப்பட்டார். ஐபிசி பிரிவு 321 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), பிரிவு 341 (தவறான கட்டுப்பாடு) மற்றும் 294 (ஆபாசமான செயல்கள்) மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் பிரிவு 75 (தாக்குதல் அல்லது புறக்கணிப்பு) ஆகிய பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அந்த நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.