கர்நாடகாவில் தி கேரள ஸ்டோரி திரைப்படத்தைப் மாணவிகள் பார்ப்பதற்குக் கல்லூரி நிர்வாகமே இலவசமாக டிக்கெட் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மே 5 ஆம் தேதி வெளியான 'தி கேரள ஸ்டோரி திரைப்படம்' நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர் சுதீப்சென் இயக்கத்தில் வெளியான இப்படம் ஹிந்து பெண்களைக் கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்குப் பல எதிர்ப்புகள் வந்த நிலையில் சில மாநிலங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டது. பின்பு, உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் படம் வெளியானது. பிரதமர் நரேந்திர மோடியும் இப்படம் குறித்து கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார்.
இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ விஜய் மஹாந்தேஷ் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில், மாணவர்கள் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்ப்பதற்குக் கல்லூரி நிர்வாகமே இலவசமாக டிக்கெட் வழங்கியுள்ளது.
கடந்த 23 ஆம் தேதி கல்லூரியின் முதல்வர் டாக்டர் கே.சி.தாஸ் வெளியிட்ட சுற்றறிக்கையில்," நாளை ( மே 24) ஸ்ரீநிவாஸ் டாக்கீஸில் மதியம் 12 மணி முதல் அனைத்து இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மாணவிகள் 'தி கேரளா ஸ்டோரி ' திரைப்படத்தை இலவசமாகப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பிற்பகலில் வகுப்புகள் ரத்து செய்யப்படுகிறது எனவும், அனைத்து மாணவிகளும் திரைப்படத்தைக் கட்டாயமாகப் பார்க்க வேண்டும்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், தி கேரள ஸ்டோரி திரைப்படத்தை மாணவிகள் பார்ப்பதற்குக் கல்லூரி நிர்வாகமே ஏற்பாடு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.