'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்ததற்கு மாநிலங்களவை எம்பி கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் 32 ஆயிரம் இளம் பெண்களை மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.
இத்திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின. அதுமட்டுமில்லாமல், படத்தைத் தடை செய்வதற்கு உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
இப்படத்திற்கு சில அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்ததால் திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சென்னையில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியிடப்பட்டது. அப்போது, சென்னையில் உள்ள திருமங்கலம் வி.ஆர் மால், ராயப்பேட்டை மால், சத்தியம் திரையரங்கம் உட்பட 6 திரையரங்குகளை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பின்பு, திரைப்படம் வெளியான முதல் நாளே படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில்,"தடை செய்யப் போராடுபவர்களுக்கு என்ன பயம். எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய முடியாது. நிகழ்ச்சிகளை ரத்து செய்யத் தமிழக அரசு நொண்டிக் காரணங்களைச் சொல்கிறது. கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தியதற்கு நன்றி" எனக் கூறியிருந்தார்.
குஷ்பு கருத்துக்கு எம்பி கபில் சிபல் தனது ட்விட்டர் பக்கத்தில்,"என்ன பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய முடியாது. அமீர் கானின் பி.கே, ஷாருக்கானின் பதான், பாஜிராவ் மஸ்தானி திரையிடலுக்கு எதிராக எதற்காகப் போராட்டங்கள். உங்கள் அரசியல், வெறுப்பைத் தூண்டும் ஒன்றை ஆதரியுங்கள் என்பது தான்" என்று கூறியுள்ளார்.