தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கமான வெப்பத்தை விட அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காலை முதலே வெயில் அதிகரித்துக் காணப்படுவதால் பொதுமக்களை மதிய வேளைகளில் வெளியில் வர வேண்டாம் எனவும் அரசு எச்சரித்துள்ளது. தமிழக மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் 45 டிகிரி செல்சியஸையும், ஆந்திர மாநிலத்தில் 50 டிகிரி செல்சியஸையும் தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது.
இந்த 2 மாநிலத்திற்கும் வெப்பநிலை அதிகரிப்பதற்குப் பல ஜோதிடக் காரணங்கள் இருப்பதாக தெலங்கானாவைச் சேர்ந்த வேத பண்டிதர்கள் கூறி இருக்கிறார்கள்.
தெலங்கானா மாநிலம் காஸிப்பேட், விஷ்ணுபுரி காலனியில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீ ஸ்வேதர்கமூல கணபதி கோவிலின் தலைமை அர்ச்சகரான இனவோலு அனந்த மல்லையா ஷர்மா கூறும்போது,"கோடை வெப்பம் அதிகமாக இருப்பதற்கு சூரியன் விருச்சிக ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மாறுவதும் மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தில் அதன் நிலையும் இருப்பதும் தான் காரணம்" என்றார்.
மேலும் அதுமட்டுமில்லாமல், வெப்பத்தினை தணிக்க 7 நதிகளின் நீரையும், 108 தேங்காய்களிலிருந்து எடுத்த தண்ணீரையும் கொண்டு சிறப்புப் பூஜை செய்வதாக இனவோலு அனந்த மல்லையா ஷர்மா கூறியுள்ளார்.
அடுத்த 12 நாட்களுக்கு 'ஓம் ஜூம் ஸ்வாஹா' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது கோடை வெப்பத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும் எனவும் அர்ச்சகர் இனவோலு அனந்த மல்லையா ஷர்மா பரிந்துரைத்துள்ளார்.