இந்திய ராணுவபடையில் பயன்படுத்தப்பட்டு வரும் இலகு ரகு துருவ் ஹெலிகாப்டர்களின் பயன்பாடுகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்துவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 4-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கிஷ்த்வார் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துருவ் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 3 ராணுவ வீரர்களில் பப்பல்லா அனில் என்ற வீரர் உயிரிழந்தார். இதையடுத்து துருவ் ஹெலிகாப்டர்களின் பயன்பாடுகளை நிறுத்துவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையில் இந்த துருவ் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அங்கும் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த இலகு ரகு துருவ் ஹெலிகாப்டர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு முதலே இந்திய ராணுவம், கப்பற்படை உள்ளிட்டவற்றில் துருவ் ஹெலிகாப்டர் பயன்பாட்டில் உள்ளது. இருந்தும் அடுத்தடுத்த விபத்துகளுக்கு துருவ் ஹெலிகாப்டர்கள் உள்ளாகி வருவதால் இதன் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் இது போன்ற விபத்துகள் நிகழ்கிறதா என்றெல்லாம் ஆய்வு செய்த பிறகே இதன் செயல்பாடுகளை தொடர்வது குறித்ததான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.