சூடானில் உள்நாட்டுப் போரால் சிக்கி தவித்த மேலும் 328 இந்தியர்கள் ஆபரேஷன் காவேரி திட்டம் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்கா நாடுகளுள் ஒன்றான சூடான் நாட்டில் ராணுவத்துடன் துணை ராணுவப் படையை இணைக்கும் திட்டத்திற்குத் துணை ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
இதில் 300-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். 1500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையம் மற்றும் முக்கிய நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகத் துணை ராணுவம் அறிவித்துள்ளது. துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை ராணுவ தளபதி முகமது ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமூக முடிவு இதுவரையில் ஏற்படவில்லை.
இந்தத் தொடர் தாக்குதலால் முக்கிய நகரங்களில் இருந்து சூடானியர்கள் வெளியேறிச் செல்கின்றனர். இந்த நிலையில், உள்நாட்டுச் சண்டை நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்திற்குச் சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.ஆனால் பல்வேறு இடங்களில் இரு தரப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.
சூடான் நாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களைப் பத்திரமாக மீட்க ஆபரேஷன் காவேரி திட்டம் கடந்த 24ம் தேதி மத்திய அரசு தொடங்கியது.
சூடான் தலைநகர் கார்தூம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து இந்தியர்கள் பஸ்கள் மூலமாக அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அரேபிய நாட்டிற்கு விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அழைத்து வரப்பட்டுப் பின்னர் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
ஆபரேஷன் காவேரி திட்டத்தின் மூலம் இதுவரை 3000 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மேலும் 231 இந்தியர்கள் தாயகம் திரும்பினர். தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வரவேற்றார். 231 பேரில் 208 பேர் குஜராத்தை சேர்ந்தவர்களும், 13 பேர் பஞ்சாப்பையும், 10 பேர் ராஜஸ்தானையும் சேந்தவர்கள் ஆவர்.
மேலும் 328 இந்தியர்கள் டெல்லி வந்து சேர்ந்துள்ளதாகவும், ஆபரேஷன் காவேரி திட்டம் மூலம் 3000 இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.