கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் தென்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் அக்கட்சியைவிட்டு கைநழுவி உள்ளது.
இந்நிலையில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற போட்டி முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமாருக்கும் இடையில் நிலவியதால் முதல்வர் பதவியேற்பதில் தொடர்ந்து இழிபறி ஏற்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக சித்தராமையா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவரை தேஷ் பாண்டே, எச்.கே பாட்டீல், எம்.பி பாட்டீல், லட்சுமி ஹெபால்கர் ஆகியோர் முன்மொழிந்தனர்.
காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து சித்தராமையா ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
அப்போது கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆட்சியமைக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
சித்தராமையா வரும் 20ம் தேதி முறைப்படி கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அதற்கான பணி மும்முரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.