கட்சியை உடைத்த அஜித் பவார்: ‘இது எனக்கு புதிது இல்லை’ - சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், ‘இது எனக்கு புதிது இல்லை’ என சரத் பவார் கூறியுள்ளார்.
சரத் பவார்
சரத் பவார்

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடனான மோதல் காரணமாக அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தனர்.

அவருக்கு சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசில் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது ஆதரவாளர்கள் 9 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என 2 நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி பேசியிருந்தார்.

தற்போது சில எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க- சிவசேனா கூட்டணி அரசில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டுகள் நீங்கிவிட்டன என தெளிவாக தெரிகிறது.

எனவே பிரதமர் மோடிக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. கடந்த1980ல் நான் தலைமை வகித்த கட்சியில் 58 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர்.

அதன் பின்னர் அனைவரும் வெளியேறி 6 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருந்தனர். ஆனாலும் நான் மீண்டும் எண்ணிக்கையை பலப்படுத்தினேன். என்னை விட்டுச் சென்றவர்கள் தங்களுடைய தொகுதிகளில் தோல்வி அடைந்தனர்.

நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். அங்கு இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com