டெல்லி: ‘போராட்டத்தை கைவிட்டேனா?’ - சாக்‌ஷி மாலிக் விளக்கம்

‘டெல்லி போராட்டத்தை கைவிட்டேனா?’ என்பது குறித்து சாக்‌ஷி மாலிக் விளக்கம் அளித்துள்ளார்.
சாக்‌ஷி மாலிக்
சாக்‌ஷி மாலிக்

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி-யுமான பிரிஜ்பூஷன் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இதையடுத்து சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத், சங்கீத்போகத் உள்பட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்துள்ளது. அப்போது பஜ்ரங் புனியா, சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர்.

இந்த சூழலில் டெல்லியில் போராட்டம் நடத்தி வருபவர்களில் முக்கியமானவராக கருதப்படும் சாக்‌ஷி மாலிக் தனது போராட்டத்தை கைவிட்டுவிட்டு ரயில்வேயில் தனக்கு பணிக்கு திரும்பியதாகவும், இதனால் போராட்டத்தில் இருந்து சாக்‌ஷி மாலிக் பின்வாங்கியதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் போராட்டத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவல்களை மறுத்து சாக்‌ஷி மாலிக் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘நீதி கிடைக்கும் வரை மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

நான் போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பாதீர்கள். நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாருமே பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம்’ என கூறியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com