சந்திரயான்-3 லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர்: 14 நாட்கள் ஆய்வு பயணத்தை தொடங்கியது

நிலவில் வெற்றிகரமாக கால் பதித்த சந்திரயான்-3. லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் பிரக்ஞான் தனது 14 நாள் ஆய்வு பயணத்தை தொடங்கியது.
லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் பிரக்ஞான்
லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் பிரக்ஞான்

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பப்பட்டது தான் சந்திரயான் 3. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3-ஐ உருவாக்கியிருக்கிறது. கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் லேண்டரை இறக்க நிலவின் தென்துருவப் பகுதியை தேர்வு செய்தனர். லேண்டரின் வேகம் பூஜ்ஜியத்தை எட்டியதும் நேற்று மாலை 6.04 மணிக்கு மெதுவாக தரையிறங்கியது. லேண்டர் தரையிறங்கிய மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதில் உள்ள ரோவர் பிரக்ஞான் வாகனம் வெளியே வந்து அதனுடைய ஆய்வினை தொடங்கும் என்று சொல்லப்பட்டது.

சந்திரயான்-3 விண்கலம்
சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான் 3 விண்கலத்தின் செயல்பாட்டுகளை இந்தியா மட்டுமல்ல உலகமே உற்றுநோக்கி கவனித்து கொண்டிருந்தது. சமீபத்தில் நிலவின் தென்துருவ பகுதியில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் விழுந்து நொறுங்கியது. அதை தொடர்ந்து இந்தியா தற்போது அதே தென்துருவ பகுதியை தேர்வு செய்து லேண்டரை தரையிறக்க முடிவு செய்தது.

லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் பிரக்ஞான்
லேண்டரில் இருந்து பிரிந்த ரோவர் பிரக்ஞான்

அதையடுத்து திட்டமிட்டப்படி விண்கலத்தில் உள்ள லேண்டர் கலன் நேற்று மாலை 6.04 மணிக்கு அதன் பணியை செய்ய தொடங்கியது. நிலவில் மெல்ல மெல்ல தரையிறங்க ஆரம்பித்தது. வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா என்று பெருமையை இஸ்ரோ பெற்றுதந்தது.

நிலவில் கால் பதித்த இந்தியா
நிலவில் கால் பதித்த இந்தியா

உலக நாடுகளில் இருந்து வாழ்த்து மழை பொழிந்தன. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமை நாட்டையே மகிழ்ச்சி வெள்ளத்தில் தத்தளிக்க வைத்தது. இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். கீரிஸ் நாட்டு பயணத்தை முடித்துவிட்டு வருகின்ற 26ம் தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கவுள்ளார்.

சந்திரயான்-3 திட்ட இயக்குனரான வீர முத்துவேல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். வீர முத்துவேலுவை தொலைபேசி மூலம் அழைத்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ரோவர் தனது 14 நாட்கள் ஆய்வு பயணத்தை தொடங்கியது
ரோவர் தனது 14 நாட்கள் ஆய்வு பயணத்தை தொடங்கியது

இந்நிலையில் நேற்று மாலை நிலவில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், தற்போது லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் பிரக்ஞான் அதன் ஆய்வை தொடங்கியதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 14 நாட்கள் ரோவர் பிரக்ஞான் நிலவின் மேற்பரப்பில் ஆய்வை மேற்கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com