‘மணிப்பூர் மக்களின் நிலையை கண்டு மனமுடைந்தேன்’ - ராகுல் காந்தி உருக்கம்

‘மணிப்பூர் மக்களின் நிலையை கண்டு மனமுடைந்தேன்’ என, ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மக்களவை எம்.பி-யுமான ராகுல் காந்தி 2 நாட்கள் சுற்றுப் பயணமாக மணிப்பூர் சென்றார். அப்போது அவரை மணிப்பூர் போலீசார் நிவாரண முகாம் செல்ல அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர்.

அதற்கு ராகுல் காந்தி, ‘என்னை தடுத்து நிறுத்தியது துரதிர்ஷ்டவசமானது‘ என விமர்சனம் செய்திருந்தார். அதற்கு, ‘காரில் சென்றால் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக தடுத்தி நிறுத்தினோம்’ என போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மணிப்பூர் பிஷ்னுபுர் மாவட்டம் மொய்ரங் பகுதியில் உள்ள இரண்டு நிவாரண முகாமிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூறினார்.

அப்போது பாதிக்கப்பட்ட ஏராளமான மக்களை சந்தித்து அவர்களின் துயரம் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ராகுல் காந்தி, ‘மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள், தங்கள் வீடுகளை இழந்தவர்களை பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான அழுகையை என்னால் காண முடிந்தது. மணிப்பூருக்கு தற்போது அமைதி தேவை.

நமது அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை கொண்டு வருவதே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com