மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு புதியதாக பணியமர்த்தப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.
மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடியால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது தான் ‘ரோஜ்கார் மேளா’ திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட காலியிடங்களை நிரப்ப போர்க்கால வேகத்தில் ஆட்களை தேர்வு செய்யும் பணியில் அரசுத்துறைகள் செயல்பட்டு வருகின்றன.
இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இதன் தொடர்ச்சியாக இன்று 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலிகாட்சியின் மூலம் பிரதமர் வழங்கினார். இந்த ‘ரோஜ்கார் மேளா’ வேலைவாய்ப்பு திருவிழா நாடுமுழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற நிலையில், மத்திய அரசின் காலிபணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர், அவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில், அரசாங்கம் சுமார் ரூ.34 லட்சம் கோடியை மூலதனச் செலவினங்களுக்காகச் செலவிட்டுள்ளது என்றும் குரூப் சி, டி பிரிவுகளின் உள்ள பணியிடங்களுக்கு நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் தற்போது ஆன்லைனில் வேலைக்கு விண்ணப்பித்தால் ஊழல் நடைபெற்ற வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.
பணி நியமன ஆணை வழங்கப்பட்ட 71,000 பேர், அஞ்சல்துறை ஆய்வாளர், டிக்கெட் கிளார்க், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர், தண்டவாள பராமரிப்பாளர், உதவி செக்ஷன் அதிகாரி உள்ளிட்ட பணிகளில் சேருவார்கள்.
மேலும் இவர்களுக்கு ஆன்லைன் மூலம், தங்களின் துறையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எத்தகைய தவறுகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்டவை பற்றி அறிவுரையும் பயிற்சியும் வழங்கப்படும். இதையடுத்து, இவர்கள் தங்களுக்கான துறையில் தங்களுக்கான வழக்கமான பணியில் ஈடுபடுவர். ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ் இதுவரை பணி நியமன ஆணைகளை பெற்றவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரமாக உயர்ந்துள்ளது.