கேரளா: படகு விபத்தில் 22 பேர் உயிரிழப்பு - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

கேரளாவில் நடந்த படகு விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்து உள்ளார்.
படகு விபத்து, பிரதமர் மோடி
படகு விபத்து, பிரதமர் மோடி

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது. இங்கு, கடலில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்து இருந்தனர்.

அப்போது பரப்பனங்காடி கடலில் படகு சவாரி செல்வதற்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்ததால் குறைந்த நபர்கள் செல்ல வேண்டிய படகில் அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு சவாரி சென்றதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் நேற்று மாலை 2 அடுக்கு கொண்ட சுற்றுலா படகில் சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்றனர். அந்த படகு கரையில் இருந்து சிறிது தூரத்துக்கு சென்றதும் கடலில் தத்தளித்தபடி அங்கும் இங்குமாக ஆடியுள்ளது.

இதனால் படகில் இருந்தவர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர். அதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் படகு திடீரென தலைக்குப்புற கடலில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும், படகு விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்துக்கு அதிகப்படியான பயணிகளை ஏற்றி சென்றதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் செல்லக்கூடிய படகில் 40 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பு வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள்.

இந்த படகு விபத்தில் இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகையாக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்’ என்று பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com