'ஆடம்பர வாழ்க்கை மோகம்' ; 9 பைக்குகளை திருடிய மாணவர்கள் - அதிர்ச்சி பின்னணி?

ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு 9 பைக்குக்களை திருடிய கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஆடம்பர வாழ்க்கை  மோகம்' ; 9 பைக்குகளை திருடிய மாணவர்கள் - அதிர்ச்சி பின்னணி?

புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் சமீப காலமாக விலையுயர்ந்த இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாகன திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா சைத்தன்யா அறிவுரையின் படி காவல் கண்காணிப்பாளர் பக்தவச்சலம் மேற்பார்வையில், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகன் தனிப்படை அமைத்து பைக் திருடும் நபர்களை சி.சி.டி.வி காட்சிகளை வைத்துத் தேடி வந்தனர். வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக கே.டி.எம் பைக்கில் வந்த இளைஞர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். அவர்கள் ஒட்டி வந்த பைக்குக்கு ஆர்.சி. புக் இல்லை என்பதும் தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஶ்ரீராம், கடலூரைச் சேர்ந்த தமிழ் (எ) தமிழரசன் என்பதும் தெரியவந்தது. அவர்களின் நடத்திய தீவிர விசாரணையில் சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காகச் சிதம்பரத்திலிருந்து புதுச்சேரிக்குக் கூட்டாக வரும் இவர்கள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்கின் பூட்டை உடைத்து பைக்கை திருடிக்கொண்டு சிதம்பரத்திற்குச் சென்ற பின்னர் அந்த பைக்கை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து சொகுசாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

குறிப்பாக விலையுயர்ந்த பைக்குகளை மட்டுமே குறிவைத்துத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் சொன்ன தகவலை வைத்து சிதம்பரத்தில் பதுக்கி வைத்திருந்த விலையுயர்ந்த 9 திருட்டு பைக்குக்களை பறிமுதல் செய்தனர். பைக்குகளின் மொத்த மதிப்பு சுமார் 15 லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒருவர் கல்லூரி மாணவன் என்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக், மாரியப்பன் ஆகியோரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com