சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்வை இந்தியாவே கொண்டாடியது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் தங்களது வாழத்துகளை தெரிவித்தது. சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தடம் பதித்த நிகழ்வு இந்தியாவுக்கு மகிழ்ச்சியான தருணம், வரலாற்று சாதனை படைத்துள்ளது இஸ்ரோ என்று இந்திய மக்கள் பெருமிதம் கொண்டனர்.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்றார் பிரதமர் மோடி. அங்கு சென்ற பிரதமர் மோடிக்கு, சந்திரயான்-3 விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் நிலவில் தரையிறங்கும் புகைப்படத்தை வழங்கினார் இஸ்ரோ தலைவர் சோம்நாத். அதனை தொடர்ந்து சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல் சந்திரயான்-3 விக்ரம் லேண்டரின் மாதிரியை வழங்கி கவுரவித்தார்.
அதையடுத்து விஞ்ஞானிகள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார், "இந்தியா நிலவில் கால் வைத்துள்ளது. நீங்கள் தேசத்தை எந்த அளவு உயரத்துக்கு அழைத்து சென்றுள்ளீர்கள், இது சாதாரணமானது அல்ல. நம் நாட்டின் கவுரவத்தை நிலவில் நிலைநாட்டியுள்ளோம். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும்.
அதேபோல் 2019ம் ஆண்டு சந்திரயான்-2 நிலவில் தனது இடத்தை பதித்த இடம் "திரங்கா" (மூவர்ணக்கொடி) என அழைக்கப்படும். எந்த தோல்வியும் நமக்கு இறுதியானது அல்ல என்பதை நினைவூட்டும் வகையில் "திரங்கா" என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சந்திரயான்-3 லேண்டர் நிலவில் தரையிறங்கிய தினம் ஆகஸ்ட் 23ம் தேதி, இனி ஆண்டுதோறும் "தேசிய விண்வெளி தினமாக" கொண்டாடப்படும்" என்று பேசினார்.