நாட்டின் 77வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி டெல்லி செங்கோட்டையில் 10வது முறையாக இன்று கொடியேற்றினார் பிரதமர் மோடி. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுதான் நம் தராகமந்திரம். 2014, 2019ஆம் ஆண்டுகளில் மிக வலுவான அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று பேசினார்
அதை தொடர்ந்து நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வந்தேன். எனது தலைமையிலான ஒவ்வொரு அமைச்சகமும் அவர்களது சிறப்பான பணியை மேற்கொண்டது. ஊழல் என்ற தடையை நாங்கள் நீக்கியுள்ளோம். பெரும்பான்மை அரசு அமைந்ததால் தான், என்னால் மாற்றங்களை கொண்டு வர முடிந்தது என்று கூறினார்.
மணிப்பூர் மாநில மக்களுடன் இந்தியா எப்போதும் உடனிருக்கும். மணிப்பூர் மாநில வன்முறைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும். அம்மாநிலத்தில் அமைதியை கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுகிறது என்று குறிப்பிட்டு பேசினார்.
மேலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் மோடியின் இந்த உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்ததை, தனது உரையில் அவர் மேற்கோள் காட்டி பேசினார்.
- சு.பிரியதர்ஷினி