டெல்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்கள் தொடர்பாக பஜ்ரங் புனியா 'தயவுசெய்து எங்களை ஆதரிக்கவும்' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பின்னர், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளான திமுக, ஆம்ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
போராட்டம் நடந்துவரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது காவல்துறையினர் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது ட்விட்டர் பதிவில்,"நமது நாட்டின் பெருமைக்காகப் போராடினோம். இன்று நாங்கள் உங்கள் சாம்பியன்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காகப் போராடுகிறோம். தயவுசெய்து எங்களை ஆதரிக்கவும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.