டெல்லியில் மத்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக அரசு தொடர்ந்த வழக்கில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். டெல்லியில் மத்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் நியமனத்தில் அதிகாரம் என்பது நேரடியாக மத்திய அரசின் கீழ் உள்ளது. இதனை எதிர்த்து டெல்லி அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி எம்.ஆர்.ஷா, நீதிபதி கிருஷ்ணா முராரி, நீதிபதி ஹிமா கோஹ்லி, நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்த்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறிய கருத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. நிலம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தவிர சேவைகள் உள்ளிட்ட துறைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது. மாநில அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மத்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு இருந்தாலும், மாநில அரசின் நிர்வாகத்தை கையகப்படுத்தாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது.
டெல்லியில் அதிகாரிகள் நியமனத்தில் அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்ற தீர்ப்பை ஏற்க முடியாது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. மாநில அமைச்சரவை குழுவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். அமைச்சரவை பரிந்துரைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்து டெல்லியில் துணை நிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.