ஒடிசா ரயில் விபத்து: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி - முன்வந்த அதானி, சேவாக்

பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உறுதுணையாக நிற்கவும் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்
கோர ரயில் விபத்து
கோர ரயில் விபத்து

கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக பலியாகியுள்ள இந்த படுமோசமான விபத்தில் 1000-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் 793 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இருப்பினும், சுமார் 50 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது.

சமீப காலங்களில் இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்துகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த பலரும் இந்த ரயிலில் பயணித்திருந்தனர்.

விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பயணிகள் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தனர். முன்னதாக 55 பேர் விமானம் மூலம் வந்தடைந்தனர். இந்த விபத்து காரணமாக பல குழந்தைகள் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.

சேவாக், அதானி
சேவாக், அதானி

குழந்தைகளின் எதிர்காலத்தைக் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், குழந்தைகளுக்கான கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என்று அக்குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்தால் நாம் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி குழந்தைகளின் பள்ளிக் கல்வி செலவை அதானி குழுமம் ஏற்கும் என முடிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உறுதுணையாக நிற்கவும் குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

அதோடு இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சேவாக்கும் முன்வந்துள்ளார். ஒடிசா ரயில் விபத்து குறித்த படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சேவாக், தனது டிவிட்டர் பதிவில் "இந்த படம் நிச்சயம் நமது மனதில் இருந்து அவ்வளவு சீக்கிரம் நீங்காது. இந்த துயரமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வியைக் கவனித்துக் கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. சேவாக் இன்டர்நேஷனல் பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறேன். மேலும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் மருத்துவ குழுவினருக்கும் ரத்த தானம் செய்ய முன்வந்தவர்களுக்கும் எனது சல்யூட். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com