புதுடெல்லி: 39% இந்திய குடும்பங்கள் ஆன்லைன் மோசடியால் பாதிப்பு - தனியார் நிறுவனம் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 39 சதவீத குடும்பங்கள் ஆன்லைன் பண மோசடியைச் சந்தித்துள்ளனர்
Online Fraud
Online Fraud

இந்தியாவில் ஆன்லைன் மோசடியால் 39 சதவீத குடும்பங்கள் பணத்தை இழந்துள்ளதாக டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டங்களில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிக அளவில் உபயோகித்து வருகின்றனர். அன்றாட தேவைகள் என ஆரம்பித்து அனைத்திற்கும் ஆன்லைன் மூலமாக மட்டுமே பணத்தை அனுப்புகின்றனர். கூகுள் ஃபே, போஃன் பே என பல ஆப்கள் மூலம் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பணப் பரிமாற்றம் செய்கின்றனர்.

இந்நிலையில், மர்ம நபர்கள் பல யுக்திகளைப் பயன்படுத்தி ஆன்லைனில் மோசடி செய்து வருகின்றனர். டிஜிட்டல் வழியில் மக்களை எப்படி ஏமாற்றலாம் என்று பல வழிகளைக் கண்டுபிடித்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமம் என ஆரம்பித்து உலகம் முழுவதும் பல திருட்டு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லோக்கல் சர்க்கிள்ஸ், ஆன்லைன் பண மோசடி குறித்து ஆய்வை நடத்தினர். இந்த ஆய்வின்படி, மக்கள் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்நிறுவனம் நடத்திய ஆய்வுக் கருத்துக்கணிப்பில், இந்தியாவில் 331 மாவட்டங்களில் 66% ஆண்களும், 34% பெண்களும் என 32,000 குடும்பத்தினர் பதில் அளித்துள்ளனர். இதன் முடிவில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் அறிக்கையை வெளியிட்டது.

அந்த அறிக்கையில்,"இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 39 சதவீத குடும்பங்கள் ஆன்லைன் பண மோசடியைச் சந்தித்துள்ளனர். அதில் 24% குடும்பங்கள் இழந்த பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 23% பேர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் மோசடியை எதிர்கொண்டுள்ளனர். இணையத்தில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பொருள் வரும் என்று நம்பி 13% பேர் ஏமாந்துள்ளனர். 10% பேர் ATM கார்டு மோசடியும், 10% பேர் வங்கிக் கணக்கு மோசடியும், 16 % பேர் பிற வகையான மோசடிகளையும் சந்தித்துள்ளனர். மேலும், 57% பேர் எந்தவித ஆன்லைன் பணமோசடியிலும் சிக்காமல் தப்பியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டெபிட், கிரெடிட் கார்டு மோசடிகள் 19 சதவீதமாக இருந்த நிலையில் இந்தாண்டு 23 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பணத்தை இழந்து திரும்பப் பெற்றவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக இருந்த நிலையில் இந்தாண்டு 27 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பது ஆய்வில் மூலம் தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com