சிறார்களை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டதாக மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.
பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் முக்கியமான கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளது. நீதிமன்றம் கூறியது என்னவென்றால்,"சிறார்களை பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவே போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், காதல் உறவிலோ அல்லது இருவரின் சம்மதத்துடனோ நடப்பதற்குச் சட்டம் கொண்டுவரப்படவில்லை" எனக் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், 22 வயதுடைய நபர் ஒருவர் மைனர் பெண்ணைக் கடத்தி பாலியல் தாக்குதல் நடத்தியதால் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 363,376 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் குற்றம்சாட்டப்பட்ட நபருக்குப் பிணை வழங்கியுள்ளார்.
இந்த பாலியல் சம்பவம் நடந்த போது போக்சோ சட்டத்தின்படி பாதிக்கப்பட்ட பெண் குழந்தையாக இருந்தது உண்மையாக இருந்தாலும், குற்றம் சாட்டப்பட்ட நபரும் 22 வயது இளைஞராக இருந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் அளித்த வாக்குமூலத்தில் இருவரின் சம்மதத்துடனையே நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால், பிணை கேட்டுத் தாக்கல் செய்த குற்றம் சாட்டப்பட்டவர் 2021 ஆம் ஆண்டு, பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் காவலில் இருந்துள்ளார்.
மும்பை உயர்நீதிமன்றம் தரப்பில்,"விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை மேலும் காவலில் வைத்தால், அவர் கடுமையான குற்றவாளிகளுடன் சேர விளைவிக்கும். அது, அவரது ஆர்வத்திற்குத் தீங்கு விளைவிக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட பெண் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். பின்னர், அவரது தாயார் கொடுத்த தகவலின் படி அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட பெண் கண்டுபிடிக்கப்பட்டார். அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியில் வந்ததாகவும், தனது நண்பருடன் மூன்று முதல் நான்கு நாள்கள் தங்கியிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். பெற்றோருக்குப் பயந்து வீட்டிற்குத் திரும்பாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர், பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு கட்டடத்தின் மாடிக்கு வரச் சொல்லி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.