‘புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மோடி திறந்து வைக்க கூடாது’- எழும் எதிர்ப்புகள்

மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறக்கக்கூடாது, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதுடெல்லியில் இருக்கும் தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் 96 ஆண்டுகள் பழமையானது. இதனால் அதற்கு பதிலாக புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்ததையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய பொதுப்பணித்துறை மேற்பார்வையில், டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம், கட்டுமான பணியை மேற்கொண்டது. இந்நிலையில் 2 ஆண்டுகளில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி முடிந்தநிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம், வருகிற 28-ந் தேதி திறக்கப்படுகிறது.

888 மக்களவை உறுப்பினர்களும், 300 மாநிலங்களவை உறுப்பினர்களும் தாராளமாக அமரும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது இந்த புதிய நாடாளுமன்றம். நாடாளுமன்ற கூட்டு கூட்டம் நடக்கும்போது, மக்களவையில் 1,280 உறுப்பினர்கள் வரை இங்கு அமர முடியும். இந்நிலையில் வருகிற 28-ந் தேதி இந்த நாடாளுமன்ற புதிய கட்டடத்தை திறந்து வைக்குமாறு மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்ததை ஏற்று, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைக்கிறார். இதற்கு எதிர்ப்புக் குரல்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மோடி திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். திறப்பு விழா நடைபெற இருக்கும் தேதியான மே 28-ந் தேதி, சுதந்திர போராட்ட வீரர் சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ''இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்'' என்றும் இதுகுறித்து காங்கிரஸ் கூறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜாவும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமானது, சட்டம் இயற்றும் பிரிவாக இருக்கிறது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும். மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்” என்று கூறியுள்ளார்.

மேலும், ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா- வும் எதிர்ப்பு தெரிவித்து ''புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்கக்கூடாதா?'' என கேள்வி எழுப்பியுள்ளார். அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில், ”புதிய கட்டடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம். அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்?” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இப்படி புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிராக கண்டனங்கள் எழும்பி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com