மணிப்பூர்: ‘கலவரக்காரர்களை கண்டதும் சுட’ உத்தரவு - ஆளுநர் அதிரடி

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில் ‘போராட்டக்காரர்களை கண்டதும் சுட’ ஆளுநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொழுந்துவிட்டு எரியும் வீடுகள்
கொழுந்துவிட்டு எரியும் வீடுகள்

மணிப்பூர் மாநிலத்தில் மெய்டேய் சமூகத்தை பட்டியல் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பின் சார்பில் பழங்குடியினர் ஒற்றுமை ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த ஊர்வலம் டோர்பாங் பகுதிக்கு வந்தபோது பழங்குடியினர் மற்றும் பழங்குடி இனத்தை சாராதவர்கள் இடையே திடீரென வன்முறை ஏற்பட்டதில் ஏராளமான வாகனங்கள், வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மணிப்பூரின் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வடகிழக்கு மாநிலத்தில் இணைய சேவை நிறுத்தப்பட்டது.

மணிப்பூர் நிலைமை பதற்றமாக உள்ளதால் பழங்குடியினரின் ஆதிக்கம் இல்லாத இம்பால் மேற்கு, கக்சிங், தவுபால், ஜிரிபாம், பிஷ்ணுபூர் மாவட்டங்கள் மற்றும் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசந்த்பூர், காங்போக்பி மற்றும் தெங்னெபால் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் நிலைமையை கட்டுப்படுத்த ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படைகள் நிறுத்தப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 4,000 பேர் பாதுகாப்பு படையினரால் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக ‘போராட்டக்காரர்களை கண்டதும் சுட’ ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் 5 நாட்களுக்கு இணைய சேவையை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com