பாஜகவின் வெறுப்பு அரசியலும், பிரிவினையும், அதிகாரப் பேராசையும் தான் குழப்பத்திற்குக் காரணம் என்று மணிப்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
மணிப்பூரில் மெய்டீஸ் என்ற சமூகத்தைப் பழங்குடியின பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக பெரும் வன்முறை வெடித்து, அங்கு அமைதியின்மை நிலவுகிறது. பழங்குடியின மக்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியதால் வன்முறை வெடித்தது. இதற்கு எதிர்த்தரப்பும் பேரணி நடத்தியதால் இந்த விவகாரம் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் இம்பால், சவுரசந்த்பூர் மற்றும் காங்போக்பி மாவட்டங்களில் பதற்றம் அதிகரித்ததையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், கலவரம் மேலும் பரவாமல் இருக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு, 8 மாவட்டங்களில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பதிவில்,"மணிப்பூர் பற்றி எரிகிறது. பாஜக, சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி அழகான மாநிலத்தின் அமைதியை அழித்துள்ளது. பாஜகவின் வெறுப்பு அரசியலும், பிரிவினையும், அதிகாரப் பேராசையும்தான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம். அனைத்து தரப்பு மக்களும் நிதானத்தைக் கடைபிடித்து அமைதிக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தனது ட்விட்டர் பதிவில் "எனது மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது; தயவு கூர்ந்து உதவுங்கள்” எனப் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோரை டேக் செய்து கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.