ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண் பயணியை தேள் கொட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் ஏப்ரல் 23 ஆம் தேதி சென்று கொண்டிருந்தது. இதில் பதுங்கி இருந்த தேள், விமானத்தில் இருந்த பெண் பயணியை கொட்டியது.
இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் தேள் கொட்டிய பெண் பயணிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்பு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்ததும் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. சோதனை செய்ததில் விமானத்தில் தேள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் வேறு ஏதேனும் பூச்சிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும் வகையில் புகை போடப்பட்டது. இதன் பின்பு உணவுத்துறையிடம் தங்களது பகுதிகளையும் சோதனை செய்ய ஏர் இந்தியா வலியுறுத்தியது.
ஏர் இந்தியா விமானத்திற்குள் உணவுப் பொருள்களால் தேள் நுழைந்திருக்கலாம் என்பதால் தேவைப்படும்போது புகை போடவும் ஏர் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே பறக்கும் விமானங்களில் பல்லி மற்றும் ஊர்வனங்கள் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் கூறுகையில், ‘பயணி ஒருவரை தேள் கொட்டிய சம்பவம் அரிய நிகழ்வு மற்றும் துரதிர்ஷ்டவசம் வாய்ந்தது. பெண் பயணிக்கு நடந்த இந்த சம்பவம் மற்றும் அசவுகரியத்திற்காக வருந்துகிறோம்’ என கூறியுள்ளது.