‘அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது’ - அஜித்பவார்

மகாராஷ்டிராவில் ‘அனைத்து எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளது’ என அஜித்பவார் கூறியுள்ளார்.
அஜித்பவார் பேட்டி
அஜித்பவார் பேட்டி

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உடனான மோதல் காரணமாக அஜித்பவார் உள்ளிட்டோர் விலகி ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இணைந்தனர்.

இதன் தொடர்ச்சியாக சிவசேனா-பா.ஜ.க கூட்டணி அரசில் துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் அவரது ஆதரவாளர்கள் 9 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக உள்ள நிலையில் அஜித் பவாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அஜித்பவார் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து அஜித் பவார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘தற்போது அமைந்து உள்ள அரசாங்கத்திற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆதரவளித்து உள்ளது.

மராட்டியத்தின் முன்னேற்றத்திற்கு அனைத்தையும் செய்வோம். மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் வெளியூரில் இருப்பதால் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் அனைவரிடமும் பேசினேன். அவர்கள் எங்களுடைய முடிவுக்கு ஒப்புக்கொண்டனர்.

அனைத்து எம்.எல்.ஏ-க்களும் என்னுடனே உள்ளனர். நாங்கள் ஒரு கட்சியாக இங்கே இருக்கின்றோம். எங்களது கட்சிக்கு 24 வயதாகிறது. இளம் தலைமை முன்வர வேண்டும்.

எங்களை விமர்சிப்பவர்கள் குறித்து கவலை இல்லை. மராட்டியத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுவோம். அதனால்தான் நாங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளோம்.

இதில், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் திருப்தி அடைந்துள்ளனர். வரும் அனைத்து தேர்தல்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி போடுவோம். பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறி வருகிறது. பிரதமர் மோடி மற்ற நாடுகளிலும் பிரபலம் ஆகி வருகின்றார்.

அனைத்து தரப்பு மக்களும், அனைத்து நாட்டு தலைவர்களும் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பா.ஜ.க-வுடன் இணைந்து போராடுவோம்’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com