கடந்த ஆண்டு ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஓடிய வீடியோவைப் பகிர்ந்து, ’’ஓடிப்பார்க்கலாமா? என பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விட்டுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா.
’தீவிர அரசியலில் இருந்து ஓய்வெடுக்கப்போகிறேன். ஆகையால் தனக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும்’ என சித்தராமையா வாக்குக் கேட்டதை பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ‘பாரத் ஜோடோ யாத்திரை’யின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தான் ஓடிய வீடியோவைப் பகிர்ந்துள்ள சித்தராமையா, பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “மிஸ்டர் நரேந்திரமோடி, சோர்வாக இருந்ததால், எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கினீர்களா? பின்னர் தேர்தலில் உங்களுக்காக பிரச்சாரம் செய்யுமாறு அவரிடம் கெஞ்சினீர்கள். நீங்களும், நானும் ஓடுவோம். யார் சோர்வாக இருக்கிறார்கள் என்று பார்ப்போம். எனது கடைசி மூச்சு வரை மக்களுக்கு சேவை செய்வேன்’’எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதமர் மோடி, சித்தராமையாவை குறிப்பிட்டு “ஒரு சில காங்கிரஸ் தலைவர்கள் அனுதாபத்தின் பேரில் வாக்கு கேட்கிறார்கள். இதுவே தங்களுக்கு கடைசி தேர்தல் என்றும் தேர்தலுக்கு பின் ஓய்வு பெறுவோம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், வாக்காளர்கள் ஆற்றல் மிக்க பா.ஜ.க வேட்பாளர்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார்.
’’இது தனக்கு கடைசி தேர்தல். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’’என சித்தராமையா ஏற்கனவே அறிவித்தார். இருப்பினும், 2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தீவிர அரசியலில் தொடர்ந்து இருப்பேன்’’ என்றும் தெரிவித்து இருந்தார்.
தன்னை விஷப்பாம்பு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதற்கு பதிலளித்துள்ள மோடி, ’’வலுவான தேசத்தை உருவாக்கவும், ஊழலை அதன் வேர்களில் இருந்து ஒழிக்கவும் எனது அரசு கடுமையாக உழைத்து வருகிறது. அதை காங்கிரஸுக்கு பிடிக்கவில்லை. பதிலுக்கு, என்னை ‘விஷப்பாம்பு’என்கிறார்கள். இன்று சொல்கிறேன். ஈஸ்வரனின் கழுத்தில் பாம்பு தங்கியிருக்கிறது. இந்நாட்டு மக்கள் எனக்கு ஈஸ்வரருக்கு நிகரானவர்கள். அவர்களுடன் தங்கும் பாம்பு நான். மே 13ஆம் தேதி காங்கிரஸுக்கு கர்நாடக மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.