கேரளாவில் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் சிகிச்சை பெற வந்தவராலேயே கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரவும் கோரி போராட்டம் தீவிரமடைந்தது.
இதற்கிடையே டாக்டர் வந்தனா தாஸ் கொலை குறித்து கேரளா உயர் நீதிமன்றம் ’இது அரசு அமைப்பின் முழுத் தோல்வி’ என கடுமையாக விமர்சித்திருந்தது. அதோடு டாக்டர்கள் பலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், ”இதன் விளைவாக ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கபடாததற்கு நீங்கள் மன்னிப்புக் கூறுவீர்களா... வேலைநிறுத்தம் காரணமாக எந்த நோயாளிக்கும் ஏற்பட்ட பிரச்னைக்கு மருத்துவர்களைக் குறை கூற முடியுமா?” என மாநில அரசிடம் சரமாரியாக கேள்வியும் எழுப்பியது. இந்த வழக்கு சம்பந்தமாக டி.ஜி.பி அனில் காந்த் ஆன்லைன் மூலம் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக, கேரள உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், குற்றவாளி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது முதல் வந்தனா தாஸ் கொல்லப்படுவது வரை அங்கு என்ன நடந்தது என்பது பற்றி விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவமனையில் கொலை, வன்முறை உள்ளிட்ட அனைத்து சம்பவங்களும் அதிகாலை 4:17 மணிக்குத் தொடங்கி அதிகாலை 4.38-க்குள் 20 நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் காவல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மேலும் கொலை குற்றவாளியான சந்தீப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை ஆக்ரோஷமாக நடந்து கொள்ளவில்லை என்றும் திடீரென்று தான் தாக்குதலில் ஈடுபட்டார் என்றும், குறுக்கிட்ட போலீஸ்காரர்களையும் அவர் தாக்கியுள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள மாநில டிஜிபி அனில் காந்த் நீதிமன்ற உத்தரவு படி ஆன்லைன் வழியாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.