கேரளாவில் மலையேற்ற பயிற்சியின்போது, ஆபத்தான பள்ளத்தில் தவறி விழ்ந்த இருவரை தீயணைப்பு துறையினர் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கருவரகுண்டு பகுதியில் உள்ள நீர் விழ்ச்சியின் மேலே உள்ள மலை உச்சிக்கு செல்ல கேரளாவை சேர்ந்த நண்பர்கள் யாசீம், அஜ்மல், ஷம்னாஸ் ஆகியோர் முடிவு செய்து மலை உச்சிக்கு சென்றனர்.
இவர்கள் நீர்விழ்ச்சியினை கடந்து அதன் மேலே ஏறிக்கொண்டு இருந்தபோது, யாசீம் மற்றும் அஜ்மல் ஆகிய இருவரும் அங்குள்ள இரண்டு பாறைக்கு நடுவில் உள்ள பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுத்து பலத்த காயமடைந்தனர். காயம் காரணமாக இவர்கள் பள்ளத்தை விட்டு வெளியே வராமல் தவித்தனர்.
இந்த நிலையில், ஷம்னாஸ் மலையடிவாரத்தை விட்டு கீழே இறங்கி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து, அவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்களின் உதவியோடு அவர்களை மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
ஆனாலும், மழையினையும் பொருட்படுத்தாமல் சுமார் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் மலை உச்சியினை அடைந்தனர். அங்கு பள்ளத்தில் மாட்டி கொண்டவர்களை மீட்க, கயிறு கட்டி பள்ளத்தில் இறங்கி அவர்களை மேலே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட நபர்கள் மலை உச்சியில் இருந்து கீழே இறங்கி அங்கு தயாராக வைக்கபட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.