ஆவிகளோடு பேச வைக்கிறேன்' - மோசடி ஆசாமிக்கு மாறுவேடத்தில் செக் வைத்த கேரள போலீஸ்
ஆவிகளிடம் பேச வைப்பதாக கூறி என்ஜினீயரிடமிருந்து ரூ.2 கோடி மோசடி செய்த கேரள மந்திரவாதியை மாறுவேடத்தில் குறிகேட்பது போல் நடித்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை புரசைவாக்கம், ஆண்டர்சன் தெருவைச் சேர்ந்தவர் கவுதம் சிவசாமி (வயது 51). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கேரளாவை சேர்ந்த மந்திரவாதி ஒருவர் தன்னிடம் இருந்து ரூ.2 கோடி மோசடி செய்துவிட்டதாக பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் , நானும் கேரளாவைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரும் நைஜீரியாவில் ஒன்றாக வேலை பார்த்தோம். இருவரும் நல்ல நண்பர்களாக பழகினோம். பின்னர் நான் நைஜீரியா வேலையை விட்டு சென்னை வந்து விட்டேன். சுப்ரமணியும் கேரளாவுக்கு திரும்பி வந்துவிட்டார். நண்பர் என்ற முறையில் எனது வீட்டுக்கு அவர் அடிக்கடி வந்து பேசுவதுண்டு. சுப்ரமணிக்கு மாந்திரீக வேலைகள் பல தெரியும். அவர் தெய்வங்களுடன் பேசுவதாக சொல்வார். புட்டபர்த்தி சாய்பாபா அவருடன் பேசுவதாக சொன்னார். எந்த ஆவியாக இருந்தாலும், அவரிடம் பேசும் என்பார்.
சாமி போட்டோவில் இருந்து விபூதியை கொட்ட வைப்பார். கையில் இருந்து திடீரென்று எலுமிச்சை பழத்தை எடுப்பார். இதுபோல மாயவித்தைகளும் செய்து காட்டுவார். ஆன்மிகவாதியான நான் அவரது செயல்களை பார்த்து அதை உண்மை என்று நம்பினேன். அவரைப்போல எனக்கும் தெய்வங்கள் மற்றும் ஆவிகளிடம் பேச ஆசை ஏற்பட்டது. எனது ஆசையை சுப்ரமணியிடம் கூற அவரும் பேசவைப்பதாக கூறினார். புட்டபர்த்தி சாய்பாபாவை பேச வைப்பதாக நம்பிக்கையூட்டினார். இதற்காக கேரளாவில் உள்ள அவரது வீட்டுக்கு என்னை அடிக்கடி அழைத்து சென்று பூஜை போட்டார். மேலும் சாய்பாபாவை பேச வைப்பதாக லட்சம், லட்சமாக பணம் கேட்டு வந்தார். இதுவரை என்னிடம் இருந்து ரூ.2 கோடி வாங்கியுள்ளார்.
ஆனால் சுப்ரமணி கூறியதுபோல, தெய்வங்களிடமோ, ஆவிகளிடமோ, என்னால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவரது மாந்தீரிக, மாயாஜால வேலை எல்லாம் மோசடி என்பதை தெரிந்து கொண்டேன். அவர் என்னிடம் ஏமாற்றி வாங்கிய ரூ.2 கோடி பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். அவர் பணத்தை திரும்ப தர மறுத்ததோடு மாந்திரீகம் மூலம் என்னை தீர்த்துக்கட்டி விடுவதாகவும் மிரட்டினார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும், நான் இழந்த ரூ.2 கோடி பணத்தை மீட்டுத்தருமாறும் வேண்டுகிறேன் என அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை கமிஷனர் மீனா, கூடுதல் துணை கமிஷனர் அசோகன் ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர் தலைமையில் அந்த மந்திரவாதியை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. மந்திரவாதி சுப்ரமணி கேரளமாநிலம் கொல்லம் அருகே உள்ள கிராமத்தில் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்த நிலையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய தேடினார்கள். ஆனால் அவர் போலீஸ் கையில் சிக்காமல் தலைமறைவாகி இருந்தார்.
அவரை பிடிப்பதற்காக, அவரிடம் குறி கேட்கவேண்டும், என்பது போல போனில் பேசி போலீசார் நடித்தனர். அதை உண்மை என நம்பி திருவனந்தபுரத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு போலீசாரை வரச்சொன்னார் மந்திரவாதி சுப்ரமணி, அங்கு குறி கேட்பவர்கள் போல மாறு வேடத்தில் சென்ற போலீசார், அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கைதான சுப்ரமணி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.