கேரளா: மத பாடசாலையில் படித்த மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

போலீசார் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அஸ்மியாமோளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கேரளா: மத பாடசாலையில் படித்த மாணவி கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

மத பாடசாலையில் படித்த மாணவி கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக நிர்வாகம் மீது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

திருவனந்தபுரம் அருகே உள்ள பீமா பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரகுமத் பீவி. இவருடைய மகள் அஸ்மியாமோள் (வயது 17). இவர் பாலராமபுரத்தில் உள்ள ஒரு மத பாடசாலையில் தங்கி படித்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பெற்றோரைத் தொடர்பு கொண்டு அஸ்மியாமோள் பேசியுள்ளார். அப்போது பேசிய அஸ்மியாமோள், தன்னை உடனடியாக பாடசாலையிலிருந்து வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். மகள் சொன்னதைக் கேட்ட பெற்றோர் பதறியடித்துக் கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளனர். ஆனால் மாணவியைப் பார்க்க பாடசாலை நிர்வாகம் பெற்றோரை அனுமதிக்கவில்லை. இதனால் அவர்கள் வீட்டுக்கே திரும்பி சென்று விட்டனர்.

பிறகு சிறிது நேரம் கழித்து பாடசாலை நிர்வாகத்தினர் மாணவியின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக அதிர்ச்சி தகவலைக் கூறி இணைப்பை உடனடியாக துண்டித்து விட்டனர். இந்நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கழிவறையில் தூக்கில் பிணமாக தொங்கிய அஸ்மியாமோளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகளின் மரணத்தால் துடித்துப்போன பெற்றோர் தன் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மகளின் இந்த மரணத்திற்கு அவள் படித்து வந்த பாடசாலை நிர்வாகமே காரணம் எனவும் பாலராமபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், ”கடந்த பக்ரீத் பண்டிகை விடுமுறைக்கு மகள் வீட்டுக்கு வந்திருந்த போது பாடசாலை நிர்வாகம் தன்னை கொடுமைப்படுத்துவதாக தங்கள் மகள் கூறினார்” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவியின் சாவு குறித்து பாலராமபுரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com