கேரளாவில் கால்முறிந்த பசுவுக்கு செயற்கை கால் பொருத்தி நடக்கப் பயிற்சி அளித்திருப்பது வியப்பில் ஆழ்த்தியுள்ளது
கேரளாவில் கொச்சியை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த தாசம்மா, தனது வீட்டில் 2 வயதான பசுவை வளர்த்து வந்துள்ளார். அந்த பசுவானது தினமும் 3 லிட்டர் அளவில் பால் கொடுத்து வந்துள்ளது. அப்பசுவின் மீது தாசம்மா அதிக பாசத்துடன் இருந்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு மாட்டுக் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசு திடீரென கத்தியது. அங்கு சென்று பார்த்த போது நாயைப் பார்த்து பசு கத்தியுள்ளது. அப்போது, நாய்க்குப் பயந்து பசு ஓட முயன்ற போது அதனுடைய பின்னங்கால் முறிந்து விழுந்துள்ளது.
பின்னர், தாசம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பசுவை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பசுவைப் பரிசோதித்ததில் காலை அகற்றினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். அப்போது, அக்கம் பக்கத்தினர் பசுவை இறைச்சிக்கு விற்றுவிடலாம் என்று கூறியதை தாசம்மா ஏற்க மறுத்துள்ளார்.
பசுவிற்கு செயற்கை கால் பொருத்தலாமா என்று தாசம்மா மருத்துவரிடம் ஆலோசனை கேட்டார். பிளாஸ்டிக் கால் பொருத்தினால் மட்டுமே பசுவை நடக்க வைக்க முடியும் என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர், தாசம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பசுவிற்கு செயற்கை கால் பொருத்த ஏற்பாடு செய்து, பசுவிற்கு செயற்கை கால் பொருத்தினர். இதனையடுத்து, மருத்துவர்கள் பசுவிற்கு நடக்கவும் பயிற்சி அளித்தனர்.
முதலில் பசுவானது, மெல்ல எழுந்து நிற்கத் தொடங்கியதையடுத்து இப்போது நடக்கவும் தொடங்கியுள்ளது. இதனைக் கண்டு தாசம்மாவும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.