கேரளா அருகே பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிவேகத்தில் வந்த மருத்துவரின் ஜீப் மூன்று வாகனங்களில் மோதி கடைக்குள் புகுந்த பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் - பந்தளம் சாலை வழியாக இன்று 10 மணி அளவில் வந்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவரின் ஜீப் அதிவேகத்தால் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக வந்துள்ளது.
இதில் எதிரே வந்த கார் ஒன்றின் மீது உரசியதுடன் - காரின் பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.அதே வேகத்தில் ஜீப் அருகில் உள்ள ஜவுளிக்கடையில் ஒன்றில் புகுந்தது.
இந்த விபத்தைப் பார்த்த அப்பகுதியினர் விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடும் நிலையில் செங்கனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பந்தளம் போலீசார் நடத்திய விசாரணையில் ஜிப்பில் வந்தவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் மருத்துவர் ஆனந்த் என்பதும் இவர் ஒரு வார கால விடுப்புக்கு வெளி மாநிலத்திற்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் நீண்ட நேர பயணத்தால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மருத்துவர் தரப்பில் இருந்து பிரேக் திடீரெனப் பழுதானதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்துக் குறித்துப் பந்தளம் போலீசார் விசாரணை நடத்தி விருந்த நிலையில்,இந்த விபத்தின் பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.