கேரளாவில் முதல் திருநம்பி பாடி பில்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு நென்மாராவை சேர்ந்த பிரதீப்நாத் (20). இவர், பெண்ணாக பிறந்து ஆணாக மாறி உள்ளார். இதனால் பலரது அவதூறு பேச்சுகளுக்கு ஆளாகி உள்ளார்.
இதில் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக பல்வேறு முறை தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மனஉளைச்சல் மற்றும் வேதனையில் இருந்து மீள உடற்பயிற்சியில் கவனத்தை செலுத்தி உள்ளார்.
இதனால் கேரளாவின் முதல் திருநம்பி பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து 2021ஆம் ஆண்டு மிஸ்டர் கேரளா பட்டத்தை பிரவீன்நாத் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பிரவீன்நாத் எர்ணாகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ரிஷானா ஐஸ்சு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவீட்டார் சம்மதத்துடன் திருநங்கையை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார் திருநம்பி பிரவீன்நாத்.
இதன் பின்னர் இருவரும் திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்னை எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதனால் ஏற்கனவே தங்கள் வெறுப்பை காட்டி வந்தவர்கள் மீண்டும் பிரவீன்நாத்தை சீண்ட ஆரம்பித்தனர். இதற்கு பிரவீன்நாத் பதிலடி கொடுத்துள்ளார். இருப்பினும் ஏதோ மன உளைச்சலில் இருந்த பிரவீன்நாத் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. திருநம்பி பிரவீன்நாத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் காதல் மனைவியான ரிஷானா ஐஸ்சு அதிக அளவிலான மாத்திரைகளை திண்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
திருநம்பி தற்கொலைக்கும், திருநங்கை ரிஷானா ஐஸ்சு தற்கொலை முயற்சிக்கும் சமூக வலைதளங்களில் மோசமான கருத்துகளை பதிவிட்டதால்தான் இவை நடந்துள்ளதாக திருநங்கைகள் மாநில முதல்வர் பினராயி விஜயன், மாநில போலீஸ் டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
திருநம்பி, திருநங்கை காதல் திருமணம் செய்துகொண்ட 3 மாதங்களில் திருநம்பி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
குறிப்பு:
வாழ்க்கையில் நமக்கு வரும் கவலைகளும், துன்பங்களும் தற்காலிகமானதுதான். தற்கொலை எதற்குமே தீர்வாகாது. ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதில் இருந்து மீண்டும் வர கீழ்க்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மைய எண்: 104
சினேகா தொண்டு நிறுவனம்:
எண்-11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண்: 044 24640050 மற்றும் 044 2464 0060