கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இம்மாதம் 10ம் தேதி சட்டமன்றத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டார். அதில், ‘’வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ உணவு தானியம். வேலை இல்லா பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ரூ. 3,000 நிதி உதவி. அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம். விவசாய கடன் ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம். வறுமை கோட்டுக்கு கீழே உள்ள டிப்ளமோ பட்டதாரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500. விவசாயிகளுக்கு பகலில் மும்முனை மின்சாரம் 8 மணிநேரம் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனத்துக்கு 100% மானியம் வழங்கப்படும். ஆழ்கடல் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும். 5 ஆண்டுகளில் ரூ12,000 கோடியில் நீல பொருளாதாரம். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ6,000 நிதி உதவி. பால் மானியம் லிட்டருக்கு ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆக உயர்வு. மேகதாது அணை கட்ட ரூ. 9,000 கோடி நிதி ஒதுக்கீடு.எஸ்.சி இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆக உயர்த்துவோம்.
எஸ்டி இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆக உயர்த்துவோம். சிறுபான்மையினர் இடஒதுக்கீடு 4% மீண்டும் அமல்படுத்துவோம். லிங்காய, ஒக்கலிகா இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு 9-வது அட்டவணையில் சேர்ப்போம். கர்நாடகா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மத்திய பாஜக அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிப்போம். இரவு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ. 5,000 சிறப்பு ஊக்கத் தொகை. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக கர்நாடகா மாநில கல்வி கொள்கை. மாநில தொழில் நுட்ப வளர்ச்சிக்காக ரூ1000 கோடி ஒதுக்கப்படும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.