ஒடிசாவில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள் குறித்த பட்டியல் அம்மாநில அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அசையும் சொத்து மதிப்பானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்றும், அசையா சொத்துக்களின் மதிப்பு அப்படியே உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நவீன் பட்நாயக்கிற்கு 65.40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது. 2020 - 2021ல் முதல்வரின் சொத்து மதிப்பு ₹64.97 கோடியில் இருந்து தற்போது ₹43 லட்சம் உயர்ந்துள்ளது.
நவீன் பட்நாயக்கிற்கு ₹12.52 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. அதில் டெல்லி, புவனேஸ்வர், ஹிஞ்சிலிகட் மற்றும் பர்கர் ஆகிய இடங்களில் உள்ள வங்கிக் கணக்குகள், நகைகள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவை அடங்கும். அவரது அசையா சொத்துகளில் "நவீன் நிவாஸ்" நிறுவனத்தில் மூன்றில் இரண்டு பங்கில் புவனேஸ்வர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ₹9,52,46,190 மதிப்பிலான அவரது வீடும், புதுடெல்லியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை, நியூ என்ற இடத்தில் உள்ள ₹43,36,18,000 மதிப்பிலான சொத்து மதிப்பும் அடங்கும்.
மேலும் முதலமைச்சர் நவீன் பட்நாயக், HDFC வங்கியில் ₹1 கோடி , RBI பத்திரங்களில் ₹9 கோடி மற்றும் தபால் அலுவலகத்தில் ₹1.50 கோடி, புதுடெல்லி, ஜன்பத்தில் உள்ள வங்கியில் ₹70.11 லட்சம்,புவனேஸ்வரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ₹20.87 லட்சம் டெபாசிட் செய்துள்ளார். இவருடைய தங்க நகைகளின் மதிப்பு ₹3.49 லட்சமும், 1980 மாடலின் பழைய அம்பாசிடர் காரின் மதிப்பு ₹6,434 ஆகவும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல், ஒடிசாவில் கோடீஸ்வர அமைச்சர்களாக அசோக் சந்திர பாண்டா, ப்ரிதி ரஞ்சன் கடாய், ரணேந்திர பிரதாப் ஸ்வைன், பிரமிளா மல்லிக், நிரஞ்சன் பூஜாரி, உஷா தேவி, அதானு சப்யசாச்சி நாயக், ராஜேந்திர தோயில்கியா, துகுனி சாஹு, பிரதீப் குமார் அமத், பிகே டெப், பசந்தி ஹெம்பிராம், ரோஹித் பூஜா பத்ரா ஆகியோர் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் நவீன் பட்நாயக், இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் 63 கோடி ரூபாய் சொத்துடன் மூன்றாவது இடத்திலிருந்தது குறிப்பிடத்தக்கது.