இந்தியாவின் பெயர் ’பாரத்’ என மாற்றம் இல்லை- அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல்

'பாரத்' என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது என்கிறார் அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

இந்தியாவின் பெயரை ’பாரத்’ என மாற்றம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரின் போது நாட்டின் பெயரை ’பாரத்’ என மாற்றுவற்கான மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த முடிவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜி20 மாநாடு தொடர்பான அழைப்பிதழ் குடியரசுத் தலைவர் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.வழக்கமாக ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்று இருப்பதற்கு பதிலாக இந்த அழைப்பிதழில் ‘பாரத் குடியரசுத் தலைவர்’ (பிரெசிடென்ட் ஆஃப் பாரத்) என இடம்பெற்றுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக எம்.பி டி.ஆர்.பாலு போன்றவர்கள் ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். மேலும் பாரத் என்ற பெயர் அரசியலமைப்புச் சட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், ”வதந்திகளை நம்ப வேண்டாம். 'பாரத்' என்ற பெயர் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் எதிர்ப்பு மனநிலை தற்போது வெளிப்பட்டுள்ளது. பாரத குடியரசுத் தலைவர் என அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்டது பெரிய விஷயம் இல்லை. இதற்கு முன்பு பாரத் சர்க்கார் என்ற பெயரில் பல அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்ததுதான்” என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com