தேச பாதுகாப்பு தொடர்புடைய ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு பகிர்ந்த குற்றத்திற்காக எல்லை பாதுகாப்புப் படையில் பணி புரியும் நிலேஷ் வல்ஜிபாய் என்பவரை பயங்கரவாத ஒழிப்புப்படை கைது செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை பூஜ் பகுதியில் நடந்து வரும் புதிய கட்டுமானப் பணிகள் பற்றிய விவரங்களை வாட்ஸ் அப் மூலம் நிலேஷ் வல்ஜிபாய் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பி.டி.ஐ செய்தியின்படி, குஜராத்தில் உள்ள பூஜ் என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் நிலேஷ் பாலியா முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நிலேஷ் வல்ஜிபாய், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கடந்த 5 ஆண்டுகளாக புஜ் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படை தலைமையகத்தில் உள்ள மத்திய பொதுப்பணித் துறையின் மின் துறை அலுவலகத்தில் பியூனாக பணிபுரிந்து வந்தார். அவரை வெள்ளிக்கிழமை கைது செய்த மாநில பயங்கரவாத ஒழிப்புப் படை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் வைக்கப் போவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலேஷ் பாலியா ஜனவரி 2023-ல் பாகிஸ்தானிய முகவருடன் தொடர்பு கொண்டுள்ளார். கட்டுமானத்தின் கட்டிடங்களில் மின்மயமாக்கல் பணிகள் தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் மற்றும் சிவில் துறைகள் தொடர்பான சில ஆவணங்களை அவருடன் பாகிஸ்தான் ஏஜெண்டுகளிடம் பகிர்ந்து கொண்டார் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
அந்த பாகிஸ்தான் ஏஜெண்டை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டுள்ளார் நிலேஷ் வல்ஜிபாய். "அந்த ஏஜெண்ட் பொறியில் சிக்கவைத்து, பணத்திற்காக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். பாகிஸ்தான் முகவர் தன்னை 'அதிதி திவாரி' என்று அடையாளப்படுத்திக் கொண்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதாகக் கூறினார். அவளுடைய வேலைக்கான தகவல் தேவைப்பட்டது. அதற்கான ஊதியம் வழங்கப்படும் என்று அந்த ஏஜெண்ட் நிலேஷ் வல்ஜிபாயிடம் ஆசை காட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நிலேஷ் வல்ஜிபாய், தான் ஒரு கணினி ஆபரேட்டர் என்று அந்த பாகிஸ்தான் ஏஜெண்டிடம் கூறியுள்ளார். அதற்காக பணம் பெறும் போது அந்த ஏஜெண்டிடம் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
செயலிகள் மூலம்அவருக்கு மொத்தம் 28,800 ரூபாய் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவரது தொலைபேசி மற்றும் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, அவர் வேறு யாருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை விசாரித்து வருகின்றனர்.